Wednesday, July 13, 2011

காதல் வலி

இமைகளை திருடிக்கொண்டு
கனவுகளை கண்டுமகிழ் என
கட்டளை இடுகிறாள்!
அமைதியாய் இருந்துகொண்டு
இம்சையை இனிமையாய் தருகிறாள்!
அவளை
பார்த்ததை தவிர
பிழையேதும் செய்யவில்லை!
ஆனால்
தவிப்பும் தாகமும் தண்டனையாய்
பெற்றுக்கொண்டிருக்கிறேன்!
இவையாவும் இன்றுவரை
அவள்
அறியாமல் இருப்பதனால்
இதயப்பகுதி ரணமாய் எரிகின்றது!!
இந்த தீராவலி தான் காதலா?

Tuesday, May 24, 2011

நீயின்றி ஒரு காதல்!


வருடிச்சென்ற பூங்காற்று
வலிதந்து சென்றது ஏனோ?
கல்லில் செதுக்கிய காதல்
கரைந்திடும் மணல் சிற்பம் தானோ?

எங்கோ உன் குரல் கேட்குதடி!
என் நெஞ்சம் உன் நினைவை நாடுதடி!
எங்கும் இருக்கிறாய்!
என்னை அழைக்கிறாய்!
உன் உயிரின் வாசனை
நான் உணர்கிறேன்!

நீ இறந்தும்
என்னுள் வாழ்கிறாய்!
நான் இருந்தும்
இறந்தே வாழ்கிறேன்!

நம் காதலை சுமந்தபடி!

Thursday, April 7, 2011

சாபம்


சபித்துச் சென்றது யார்?
சாலையோரத்தில் வளர்ந்து வாழ்ந்தும் கொண்டிருக்கிறது
மனித மரங்கள்!


Thursday, October 28, 2010

சராசரி காதலன்

கல்லூரியில் காதல் செய்தேன்.
கன்னி உன் நினைவால்
கவிதை பல செய்தேன்.

ஒவ்வொரு நாளும் நம் உடைகளின் வண்ணம்
ஒன்றாக இருக்க வேண்டுமென்று
கடவுளை பிரார்த்தனை செய்தே
காலையில் நானும் உடையணிந்தேன்.

கல்லூரியிலிருந்து பேருந்து நிருத்தம்வரை
காக்கிச்சட்டை போடாத காவலனாய்
உன்னை பின்தொடர்ந்தேன்
உனக்கு தெரியாமலே!

இவையெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம்!
எப்படி இருந்தாலும் கவலை இல்லை!
ஏனென்றால் நானும் ஒரு சராசரி காதலன் தான்!

சொல்லாமல் காதல் வளர்த்தேன்!
சொல்லிவிட நாளும் துடித்தேன்!
உனக்கு - வெகுதொலைவில் நான்!
எனக்கு - மிகஅருகில் நீ!

ஆனால்
நான் யாரென்று உனக்கு தெரியாத போது
எத்தனை காதல் செய்து
என்ன பயன்!?

                                                                          

Friday, October 22, 2010

நீ செய்த மாயமென்ன?


கண்ணெதிரே நீ நின்ற போதும் உன்னை
காதலிக்க தோன்றவில்லை!
தோளோடு தோள் உரசி
என்னை கடந்து சென்ற போதும்
உன்னை காதலிக்க தோன்றவில்லை!
எப்போது உன்னை காதலிக்க தொடங்கினேன்?
இப்போது வரை எனக்கு தெரியவில்லை!

ஆனால்
உனையன்றி வேறு ஒரு பெண்ணை
காதலியாக்க தோன்றவில்லை!
எனக்கானவள் நீ என்று மட்டும் நம்பினேன்.
என் உலகம் நீ தான் என மாறியது!
உன்னை சுற்றி திரிந்தேன்
உனக்கு தெரியாமலே!

என்ன மாயம் செய்தாய்?

நினைவுகளை தேடி!

உன் மீது எனக்கிருந்தது என்ன?
உற்சாகமா? ஈர்ப்பா? காதலா? காமமா?
என்னவென்று சொல்ல தெரியவில்லை!
ஆனாலும் என்னுள் கலந்து விட்டாய்!
உனை நேசித்த தருணங்களை திரும்பி பார்க்கிறேன்...
எனை நானே கடந்து போகிறேன்...

உன் நினைவுகளை தேடி!